×

"இது எலெக்ஷன் அல்ல, எமோஷன்" : நெல்லையில் தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு..!

 

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த கேடிசி நகர் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தவெக வேட்பாளர்களை ஆதரித்து இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், திமுக கையில், மு.க.ஸ்டாலின் சார் கையில் முழு பவர் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஒரு முட்டுக்கட்டை போட்டிருப்பார். நம்மை வரவிடாமல் தடுத்திருப்பார். ஆனால் இப்போது அதிகாரம் இல்லாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதாலோ என்னவோ எளிதாக இங்கே வர முடிந்தது. திமுக அரசு நமக்கு எவ்வளவு பிரச்னைகள், நெருக்கடிகளைக் கொடுத்தது. அவர்களையும் தாண்டி இன்னும் சில பேர் அவதூறுகளைப் பரப்பினர். திமுக கூட்டணி; பாஜக கூட்டணி இரண்டு பேரும் தனித்தனியாக வெளியே இருந்தாலும் உள்ளுக்குள் இரண்டு பேரும் ஒன்றுதான்.

இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே நோக்கம் தான். உங்களுக்காக நல்லது செய்வதற்கும், உங்களுக்காக உழைப்பதற்கும், உங்களுடனே நிற்பதற்கும் இந்த விஜய் வந்துவிடக்கூடாது. இதுதான் அவர்களுடைய நோக்கமே. அவர்கள் நினைத்ததைச் செய்ய முடியவில்லை என்பதால் என் மேல் கடும்கோபத்தில் இருக்கிறார்கள். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத சூழலை மக்களான நீங்களே உருவாக்கிவிட்டீர்கள் என்றார்.

கூட்டணி கணக்குகளை எல்லாம் நீங்களே உடைத்துவிட்டீர்கள் என்று வாக்காளர்களை பார்த்து கூறிய விஜய், திமுக கூட்டணி கட்சிக்காரர்களே ஒருவருக்கொருவர் வாக்களிக்கமாட்டார்கள் போல் தெரிகிறது. இதுதான் திமுக கூட்டணியின் நிலை என்று கிண்டல் செய்தார்.

பாஜக கூட்டணியின் நிலைமை இன்னும் மோசம் என்று கேலி செய்த விஜய், மக்களே இந்த திமுகவின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம் மேல் கோபம். என் மீது திமுவுக்கு கோபம் ஏற்பட முக்கியமான காரணம், அவர்கள் வீடுகளிலேயே அவர்கள் குடும்பத்திலேயே விசில் சத்தம் பலமாக கேட்கிறதாம் என்றார்.

பல கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை ஸ்டாலின் சார் பையில் போட்டு வைத்துள்ளார்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியவர், ஆனால் உண்மையான காங்கிரஸ் நம் பக்கம் நிற்கிறது என்றார்.

சிறுபான்மை மக்களிடம் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டதாக கூறிய விஜய், மதச்சார்பற்ற கொள்கையோடு உண்மையான முகமாக இருக்கிறாரே. இந்த சிறுபான்மை மக்களும் விஜய் பக்கம் தானே நிற்கிறார்களே என்பதால் தான் என் மீது திமுகவுக்கும், பாஜகவுக்கும் கோபமோ கோபம் என்று குறிப்பிட்டார்.

33 வருடங்களாக ஓவ்வொரு வீட்டிற்குள்ளேயும், மனதிற்குள்ளேயும் போவதற்கு நான் பட்டப்பாடு எனக்கு தானே தெரியும். நான் ஏற்கனவே சொன்னது போல் கட்சியை ஆரம்பித்துவிட்டு நான் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லவில்லை. ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற பிறகுதான் கட்சியை ஆரம்பித்தேன். இது அரசியலையெல்லாம் தாண்டி இருக்கின்ற உறவு; இதுவொரு பூர்வஜென்ம பந்தம். அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு இது என்னவென்று புரியாது என்று உணர்ச்சி ததும்ப விஜய் பேசினார்.

இது மற்றவர்களுக்கு எலெக்ஷன்; ஆனால் விஜய்க்கும், விஜய்யுடன் இருப்பவர்களுக்கும் இதுவொரு எமோஷன்ஸ் என்றவர், நான் சந்தோசப்பட்டால், மக்கள் சந்தோசப்படுகிறார்கள். மக்கள் சந்தோசப்பட்டால் நான் சந்தோசப்படுகிறேன். எனக்கு ஒன்று என்றால் மக்களும், மக்களுக்கு ஒன்று என்றால் எனக்கும் கண்கலங்கும்.

கரூர் விஷயத்தில் நடந்ததைப் பற்றி ஊருக்கே தெரியும் என்று கூறியவர், ஆனால் விஜய் மீது பழியைப் போட்டனர். பெரிய பழியைப் போட்ட பின்பும் மக்கள் விஜய் கூட நிற்பதைப் பார்த்து என்ன பண்ணலாம் என்று 'ஜனநாயகன்' திரைப்படத்தை முடக்கினர். படத்தை முடக்கினாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் தனது வேலையைச் செய்துக் கொண்டே இருக்கிறார்; எனவே அதுவும் எடுபடவில்லை. அடுத்து வேறு என்ன செய்யலாம். போடு 'SOP' என்று ஒன்று போடு. விஜய்க்கு மட்டும் தனியாக ரூல்ஸ், கண்டிஷன்ஸ் போட்டார்கள்; விஜய் வெளியே வரக்கூடாது; மக்களைச் சந்திக்கவேக் கூடாது என்று செயல்பட்டார்கள்; ஆனால் அதுவும் எடுபடவில்லை என்றவர், எத்தனை வேதனைகளை இந்த திமுகவாலோ, பாஜகவாலோ மற்றும் பலராலோ கொடுத்தாலும் யாராலும் என்னை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்று விஜய் ஆணித்தரமாக கூறினார்.

நமது வேட்பாளர்கள் யாரும் டாடாவோ, பிர்லாவோ, அதானியோ, அம்பானியோ கிடையாது என்று குறிப்பிட்ட விஜய், நமது குடும்பத்தில் இருக்கும் ஒருவரை தான் வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கிறேன். வேட்பாளர் வேறு, விஜய் வேறு என்று நினைத்துவிடாதீர்கள். இந்த விஜய் தான் வேட்பாளர், வேட்பாளர் தான் விஜய் என்றார்.

இத்தனை வருடங்கள் யாரு யாருக்கோ வாக்களித்தீர்கள். ஆனால் இந்த ஆண்டு நமது குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு நாம் வாக்களிக்கப் போகிறோம். அந்த வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது நமக்கு நாமே வாக்களிப்பது போன்றது. அந்த வேட்பாளர் வெற்றி பெற்றால் நாம் வெற்றி பெற்ற மாதிரி. இப்படியொரு எமோஷ்னல் ஆன தேர்தலை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே பார்த்திருக்காது. இதுவொரு அதிசய தேர்தல்; 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலை போன்றது. இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் எனறு வாக்காளர்களிடம் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், இதற்கு முன்னாள் ஆட்சியில் இருந்தவர்கள், மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவைக் கூடவே தொடமாட்டேன் என்று தில்லாக சொல்ல முடியுமா? என்று கேள்வியெழுப்பிய விஜய், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதைத் தலைவிரிதாடுகிறது. இதற்கு பதில் சொல்ல முடியுமா ஸ்டாலின் சார்? இவிளாத்திகுளம் மாணவி பாலியல் கொலையில் உங்கள் பதில் என்ன? என்று முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி விஜய் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

ஐந்து வருட ஆட்சியில் போலீசாரை வைத்து என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்; பொம்மையைப் போல் விளையாடிக் கொண்டிருந்தீர்களா? என்று ஸ்டாலினை நோக்கி கேள்வி கேட்ட விஜய், எந்த முகத்தை வைத்து கொண்டு வாக்குக் கேட்பீர்கள். பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்திற்கான தேர்தல்; அதை யாராலும் தடுக்க முடியாது. இது ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்று விஜய் பேசி முடித்தார்.