இதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி..! “வெல்வோம் 200.. படைப்போம் வரலாறு..!
தமிழ்நாடு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனது 49-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை பெரியார் திடலில் நடந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "வெல்வோம் 200.. படைப்போம் வரலாறு என்பதுதான் நமது இலக்கு. அதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி.." எனப் பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆதிக்கவாதிகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் நமது பிறந்த நாளில் மரியாதை செலுத்தினேன். பேரறிஞர் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம்! மாநில உரிமைகளையும் சமூக நீதியையும் நிலைநாட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.