விபத்து இப்படி தான் நடந்தது - மீட்கப்பட்ட நடத்துனர் பேட்டி..!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீடித்து வரும் கனமழையின் காரணமாக, நீலகிரி மலைப் பாதைகளின் பல்வேறு இடங்களில் உள்ள மண் தளர்வடைந்து சாலைகளில் சரிந்து விழுந்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - ஊட்டி மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
இதனிடையே பர்லியார் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, எதிர்பாராத விதமாக சாலையில் ஏற்பட்ட மண் சரிவு குவியலுக்குள் சிக்கிக் கொண்டது. இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மண் குவியலுக்குள் சிக்கித் தவித்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர் ஜனகராஜ் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டநிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட அரசு பஸ் நடத்துனர் பேசும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறுகையில், “விபத்தில் சிக்கிய அரசு பஸ்சில் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை, நானும் ஓட்டுநர் மட்டும்தான் இருந்தோம். சாலையில் வரிசையாக மரங்கள் விழுந்தது. பஸ்சை பாதுகாப்பாக நிறுத்த முயன்றபோது மண்சரிவில் சிக்கினோம்” என்று அவர் கூறினார்.
தற்போது அந்தப் பகுதியில் சரிந்து விழுந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினரும், உள்ளூர் நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலைப் பாதையில் தொடர்ந்து மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு பயணத்தை தவிர்த்திடுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.