×

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை! ஒரே நேரத்தில் 38 பேருக்கு தூக்கு..! 

 

குஜராத்தின் ஆமதாபாதில் 2008, ஜூலை 26ம் தேதி, சங்கிலி தொடர் போல, நகரின் 14 இடங்களில் அடுத்தடுத்து 21 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. 70 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்த இந்த சதிச் செயலில் 58 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைகளையும் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால், நாடு முழுதும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிகள் 38 பேருக்கு துாக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2022ல் தீர்ப்பளித்தது. அப்போது, 'அரிதினும், அரிதான வழக்கு' என, நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் ஏ.ஓய்.காக்ஜே மற்றும் சமீர் தவே அடங்கிய அமர்வு மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம், குற்றவாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த 2007 டிசம்பரில் தடை செய்யப்பட்ட, 'சிமி' அமைப்பால் நடத்தப்பட்ட ரகசிய பயிற்சி முகாமில் தான் இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டப்பட்டது வழக்கு விசாரணையில் அம்பலமானது. குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்திற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு அறிவித்து இருந்தது.

வழக்கு விசாரணையின்போது, சிறைக்குள் 213 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி 24 குற்றவாளிகள் தப்பிக்க முயன்றனர். ஆனால், அவர்களின் திட்டம் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது.