×

சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து பெரும்பான்மை அடைய இந்த அரசு முயற்சிக்கிறது - வானதி சீனிவாசன்..!

 

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதி மக்களோடு சேர்ந்து பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஜன சங்கத்தின் நிறுவனரும், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு சிறையில் உயிர் நீத்தவருமான சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாள் நிகழ்ச்சிகள், நாடு முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு தொகுதியில் சியாமா பிரசாத் முகர்ஜியின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, மரம் நடப்பட்டது. நான் எம்எல்ஏவாக இருந்தபோது இந்த பகுதியில் அமைக்கப்பட்ட வாட்டர் ஏடிஎம் இயந்திரம் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர். அதனை பார்வையிட்டு உடனடியாக சரி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளேன்.

தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர், தமிழகத்தின் தேவைகளை, பிரச்சினைகளை மத்திய அமைச்சர்களுடன் பேசி பெற்றுத்தர வேண்டும். அந்த அளவுக்கு முக்கியமான பணி அது. அதை தமிழக அரசு தங்கள் விருப்பம் போல் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். ஆனால், அதில் சர்ச்சை எழும்போது அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும்.

காவிரி பிரச்சனையை பொருத்தவரை தமிழக முதல்வர் விஜய் தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்வருடன் சுமுகமாக பேசி தீர்க்க வேண்டும். தமிழக அரசின் அனுமதி இன்றி எந்த அணையும் கட்டக் கூடாது என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பலரும் செல்வது இயல்பான ஒன்று. ஆனால், மிகவும் புத்திசாலித்தனமாக திட்டமிட்ட ரீதியில் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து பெரும்பான்மை அடைய இந்த அரசு முயற்சிக்கிறது. இதை குதிரை பேரம் என சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்?

தேர்தலுக்கு முன்பு கொள்கை கூட்டணி என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமையாக பேசி வந்தார். இப்போது அந்த கூட்டணி சிதறி உள்ளது. எது கொள்கை என திமுக யோசிக்க வேண்டும். உறுதியான கொள்கையோடு தேசிய சிந்தனையோடு மக்கள் வளர்ச்சிக்காக உள்ள கட்சி பாஜகதான்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய இயக்கம் துவங்கியுள்ளார். அவர் கட்சிக்கு எதிராக வந்தால் அப்போது கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும். அனுபவமிக்கவர்களையும் புதியவர்களையும் ஒருங்கிணைத்து செல்வதுதான் ஒரு கட்சிக்கு சிறந்த பண்பு. அந்த வகையில் பாஜகவில் அனுபவமிக்கவர்களுக்கும், புதியவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அண்ணாமலைக்கு பாஜக உயர்ந்த பொறுப்பை கொடுத்தது. அவரும் கட்சிக்காக சிறப்பாக உழைத்தார்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் இப்போதும் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் பேசும்போது நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது.

தவெக அமைச்சர்களில் சிலர் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பல்வேறு கோவில்களுக்கு சென்று ஆய்வு செய்கிறார். கோவில் பணத்தை பக்தர்களின் வசதிகளுக்காக செலவிட வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. பார்ட்டி ஃபண்ட் வாங்க மாட்டோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க நல்ல விஷயமாகும். கடந்த திமுக ஆட்சியில் லஞ்சம் அதிகமாக இருந்தது. இதனால் ஏற்பட்ட கடுமையான வெறுப்பு காரணமாகவே மக்கள் திமுகவை தோற்கடித்தனர்.

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை பொருத்தவரை அரசு கமிட்டி அமைத்து, தவறு செய்தவர்களை கைது செய்துள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.