இந்த ஆபத்தான மருந்துக்கு தமிழகம் முழுவதும் தடை!
பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்திற்கு தமிழ்நாடு முழுவதும் முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.
அனைத்துப் பசுமையான களைகள் மற்றும் பயிர்களைத் தொடு நஞ்சாகச் செயல்பட்டு அழிக்கும் இம்மருந்து, இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இம்மருந்திற்கு விஷமுறிவு இல்லாத காரணத்தால், நாட்டில் ஆண்டுக்குச் சராசரியாக 17,000 பேர் இதனை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் இம்மருந்திற்கு நாடு முழுவதும் தடை விதித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு நவம்பர் 25, 2026 அன்று வெளியிட்ட அரசிதழ் மூலம் இத்தடை உத்தரவை மாநிலம் முழுவதும் அமல்படுத்தியுள்ளது.
அரசு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவுகள்
பாராகுவாட் டைகுளோரைடு மருந்தை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், எடுத்துச் செல்லுதல், விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. இம்மருந்திற்குப் புதிதாக எந்தவொரு பதிவும் அனுமதிக்கப்படாது; பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968-இன் பிரிவு 9-இன் கீழ் ஏற்கெனவே வழங்கப்பட்ட அனைத்துப் பதிவுச் சான்றிதழ்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். உற்பத்தியாளர்கள் தங்களது பழைய பதிவுச் சான்றிதழ்களை உடனடியாக மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக் குழுவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
இத்தடையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை உதவி இயக்குநர்கள் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, உற்பத்தி, விநியோக மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இருப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 35,415 லிட்டர் பாராகுவாட் டைகுளோரைடு மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தடையை மீறிச் செயல்படும் நிறுவனங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968 மற்றும் விதிகள் 1971-இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இத்தடை உத்தரவை முழுமையாகக் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.