தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதே வேளையில் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளப்பட வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்ற இயலாத நிலையில், எழுத்துப் பூர்வமாக எனது உரையை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்தேன். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டிலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக அப்பணிகள் தள்ளிப்போனது. என்றாலும், அதனைத் தொடங்குவதற்கான முயற்சி ஏதுமில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போவதால் அரசின் நலத்திட்டங்களுக்கென நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து அதில் குறிப்பிட்டுள்ளேன். மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதே வேளையில் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.