×

ஒரு குறிப்பிட்ட மதம், சாதியைச் சேர்ந்தவரின் ஆதரவு இருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்- திருமாவளவன்

 

21.10.2023 அன்று சென்னை ஒய். எம்.சி. ஏ மைதானத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அக்கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

அதில், “1.தேர்தல் முறையை சீர்திருத்த வேண்டும் : பெரும்பான்மைக்கு அதிகாரம் என்னும் இப்போதுள்ள தேர்தல் ஜனநாயக முறையில் ஒரு ஆபத்து உள்ளது . ''ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சேர்ந்த பிரிவினரின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் நாம் வெற்றி பெற்று விடலாம்'' என்ற எண்ணத்தை இது வேட்பாளர்களிடம் ஏற்படுத்துகிறது.  அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது சாதி, மத அடிப்படையில் செயல்பட இது வழிவகுக்கிறது. 

'பரவலான மக்களின் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டிய அவசியமில்லை. குறுகிய சில வாக்குறுதிகளைத் தந்தாலே போதும்' என  எண்ணுவதற்கும்; மதச் சிறுபான்மையினர் ஒருவரையும் வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என பாஜக கருதுவதற்கும் இதுவே காரணமாகிறது. பெரும்பான்மை ஆட்சி என்பதைப் பெரும்பான்மைவாத ஆட்சியாக உருமாற்றிவிட முடியும் என்ற ஆபத்தை இந்தியா இன்று சந்தித்து வருகிறது. இந்நிலையில் பட்டியல் சமூகத்தினர், மற்றும் சிறுபான்மை சமூக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு என்கிற அரசியல் சமத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அது தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையால் நிறைவேற்றப்படாது. எனவே , 30% பிரதிநிதிகளை நேரடித் தேர்தல் மூலமாகவும் 70% பிரதிநிதிகளை விகிதாச்சார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்வுச் செய்யக்கூடிய தேர்தல் முறை ஒன்றை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் என இந்தக் கூட்டம் இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.  

2. தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்படக்கூடாது: இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு நான்குமுறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 1952,1963, 1973, 2002 ஆகிய ஆண்டுகளில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையங்கள் அமைக்கப்பட்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அடுத்த மறு சீரமைப்பு 2026 ஆம் ஆண்டு செய்யப்பட வேண்டும். அப்போது நாடாளுமன்ற, சட்ட மன்றங்களுக்குமான தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளன. 

தொகுதி மறு சீரமைப்புக்கு மக்கள் தொகையே அடிப்படையாக வைக்கப்படுவதால் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களின் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படாமல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு இப்போதே எடுக்க வேண்டும் என இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது. 

3. சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்:  2021 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி ஒன்றிய அரசு தள்ளிப்போட்டது. ஆனால் கொரோனா தொற்று ஆபத்து முற்றாக நீங்கிவிட்ட நிலையிலும் ஒன்றிய பாஜக அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் ஏமாற்றி வருகிறது. இதனால் பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறைந்து ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இனியும் தாமதிக்காமல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.  அவ்வாறு மேற்கொள்ளும்போது  இந்திய ஒன்றிய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. 

4. காஸா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரைக் கண்டிக்கிறோம்! காஸாவில் உள்ள பாலஸ்தீனிய மக்கள்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள அநீதியான போரை இக்கூட்டம்  வன்மையாகக் கண்டிக்கிறது. அந்தப் போர் பிற நாடுகளுக்கும் பரவி உலக யுத்தமாக மாறக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. காஸா மீதான யுத்தத்தை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும். போர் நிறுத்தம் செய்யுமாறு  இஸ்ரேலை இந்திய ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டுமென இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.