“ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பதே தவெக முன்னணி நிர்வாகிகளின் விருப்பம்”- திருமாவளவன்
விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெக அமைச்சர்கள் ஆர்வத்தில் வெளிப்படுத்துவதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் விஜய் ஆட்சி அமைப்பதற்கு மெஜாரிட்டி இல்லை என்றதும் , முதல் நபராக முண்டியடித்து கொண்டு ஆதரவை கொடுத்தது காங்கிரஸ். அதே போன்று விஜயை வைத்து 2029 நாடளுமன்ற தேர்தலில் பிரதமராக அமர்ந்து விடலாம் என்கிற கனவில் விஜய் முதல்வராக பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார், காங்கிரஸ் கட்சிக்கு தகுதி மீறி செய்தது போன்று அமைச்சரவையில் இடம் மற்றும் ஒரு ராஜ்யசபை எம்பியும் கொடுத்தார் முதல்வர் விஜய். ஆனால் இந்த கூட்டணி அமைந்து நூறு நாட்கள் ஆன நிலையில் அடுத்த பிரதமர் விஜய் தான் என தவெக அமைச்சர்கள் பேச தவெக - காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைச்சல் உண்டாகியுள்ளது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தவெக முன்னணி தலைவர்கள் யாரும், பிரதமர் வேட்பாளர் விஜய் என இதுவரை பேசியதில்லை. ஆனால், மற்றவர்கள் அவ்வாறு பேசி வருகின்றனர். அதை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது. என்னதான் அமைச்சர்களாக இருந்தாலும், தொண்டர்களின் மனநிலை இருக்கத்தான் செய்யும். விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என தவெக அமைச்சர்கள் ஆர்வத்தில் வெளிப்படுத்துவதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பதே தவெக முன்னணி நிர்வாகிகளின் விருப்பமாக இருக்கிறது. தேசிய அளவில் தவெக, காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இல்லை” என்றார்.