×

" திமுகவிற்கும் விசிகவிற்கும் மோதல் கிடையாது"- திருமாவளவன்

 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நாடாளுமன்ற நிலை குழுவின் தலைவர் ராதா மோகன் சிங் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் உட்பட 14 பேர் வருகை தந்தனர். குன்னூரில விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
 
அதன்பின்பு செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த திருமாவளவன், “அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு  தவெகவில் சேர்வது என்பது நாகரீகமான அரசியலாக இருக்க முடியாது. அது ஏற்புடையதல்ல. அது தவெகவிற்கு நற்பெயரை ஈட்டி தராது . அவர்கள் மீதான நம்பகத்தன்மையை கலங்கத்திற்கு உட்படுத்தும். அதிமுகவில் உள்ள முன்னணி பொறுப்பாளர்கள்  அந்தக் கட்சியில் நிலவுகிற குழப்பத்தின் காரணமாக  இன்னொரு கட்சியில் சேர்வது என்பது வேறு.  ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவியை ராஜினாமா செய்து விட்டு  தவெகவில் இணைவது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையாக  கருத முடியாது. பொதுமக்களும் நம்ப மாட்டார்கள், அது போன்ற நடவடிக்கைகளை தவெக ஊக்கப்படுத்துமானால்  அது தவெக மீது நற்பெயர் மீதான கலங்கத்தை உண்டாக்கும். நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் முதலமைச்சரின் டெல்லி பயணம்  வழக்கமான ஒன்றுதான். யார் முதலமைச்சராக பொறுப்பேற்றாலும் பிரதமரை சந்திப்பது அவசியமானது. தவிர்க்க முடியாதது. அதனை வரவேற்கிறோம்.

தேர்தல் வாக்குறுதிகளில் விவசாய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள்  தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயிகளுக்கான பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று தவெக அறிவித்திருக்கிறது என்பதை இப்போது விவசாய சங்கங்கள் அதனை சுட்டிக்காட்டி வருகின்றன. நிதி நெருக்கடி காரணமாக உடனடியாக அதனை செய்ய இயலவில்லை. படிப்படியாக செய்வோம் என்று அரசின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். திமுகவிற்கும் விசிகவிற்கும் மோதல் கிடையாது. விடுதலை சிறுத்தை தொண்டர்களுக்கு நான் வெளிப்படையாக வேண்டுகோள் விடுகிறேன். சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிற அவதூறுகளுக்கு ஒருபோதும் செவி கொடுக்க வேண்டாம். எதிர்வினை ஆற்ற வேண்டாம். திமுகவுடன் எந்த வகையிலும் இதை காரணம் காட்டி ஒரு முரண்பாட்டை உருவாக்க வேண்டாம். அது ஆரோக்கியமானது இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்றார்.