'பாஜக மதவெறி அரசியலுக்கு முதல் கள பலி' - திருமாவளவன்
திருப்பரங்குன்ற விவகாரத்தில் பாஜகவின் மதவெறி அரசியலுக்கு முதல் கள பலியாகியுள்ளது, இன்னும் என்னென்ன செய்ய போகிறார்கள் என்ற கவலையளிக்கிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “100 நாள் வேலை திட்டத்தை முற்றாக அழிக்க வேண்டும் என பாஜக அரசு குறியாக இருக்கிறது. பாஜக அரசியல் எவ்வளவு தரம் தாழ்வு உள்ளது என்பதற்கு இதை விடச் சான்று இல்லை. பாஜக ஆட்சி அமைத்தில் இருந்து காந்தியை சிறுமைப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர். காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவை போற்றுகிறார்கள். தற்போது ஜி ராம் ஜி என்ற பெயர் சூட்டியுள்ளனர். காந்தி மீது எவ்வளவு வெருப்பை உமிழ்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இதுவரை யாருக்கு 100 நாள் வேலை முழுமையாக கொடுக்கவில்லை. தற்போது நிதியை நிறுத்தி திட்டத்தையே நிறுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் 120 நாள் வேலை என நாடகமாட நினைக்கிறார்கள், அவர்களது போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை கண்டித்து வரும் 23 தேதி இடது சாரி அமைப்புகளுடன் ஆர்ப்பாட்டம் ஆறிவித்தோம். திமுக, காங்கிரஸ் ஆகியோரும் இணைந்து 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர், விசிக பங்கேற்கிறது, நான் சென்னையில் கலந்து கொள்கிறேன். விசிக சார்பில் தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களை அறிவிக்க இருக்கிறோம்.
தொடர்ந்து முழு பொறுப்பாளர்களையும் அறிவிக்கிறோம். அதன் பிறகு தேர்தல் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடைபெறும். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெறும். 100 நாள் வேலை திட்டத்தில் 40 சதவீதம் மாநில நிதி என அறிவித்துள்ளனர். ஒன்றிய அரசு நிதி ஒதுக்க முடியாது என மறைமுக கூறுகிறார்கள். திட்டம் ஒழிக்க வேண்டும் என்பதே நோக்கம். மேலும் கார்பரேட் மயமாக்கத்தில் தான் தீவிரம் காட்டுகிறார்கள். திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க நினைக்கிறார்கள், இதனை கண்டித்தும் வரும் 22 ல் எனது தலைமையில் மதுரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கபடுபவர்கள் யார்? நாட்டின் பூர்வ குடிகளை பட்டியலில் இருந்து நீக்க என்ன காரணம் என தெரியவில்லை. அண்டை நாட்டினருக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது என்பதற்காக என கூறினார்கள். ஆனால் பீகாரில் நீக்கப்பட்டவர்களில் சுமார் 300 பேர் கூட வெளி நாட்டவர் அல்ல. வாக்குரிமையை பறித்து, அதன் மூலம் குடியுரிமை பறிப்பார்கள் என்பது தான் எங்கள் யூகமாக இருக்கிறது. மக்களின் குடியுரிமை பறிக்க தேர்தல் ஆணையம் மூலம் முயல்கிறார்கள். திருப்பரங்குன்ற விவகாரம் பூரணசந்திரன் மரணம் கவலையளியக்கக் கூடிய நிகழ்வு, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும், பாஜகவின் மத வெரி அரசியலுக்கு இது முதல் கள பலி, இன்னும் என்னென்ன செய்ய போகிறார்கள் என்ற கவலை தான் உள்ளது” என்றார்.