×

முதல்வர் தலைமையிலான குழுவில் திருமாவளவனுக்கு இடம்

 

பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை தவெக அரசு மறுசீரமைத்துள்ளது. 


தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு விசிக ஆதரவு அளித்துள்ளது. விசிகவிற்கு தவெக அமைச்சரவையில் இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் திமுக, அதிமுக ஆகிய 2 பெரிய கட்சிகளின் ஆட்சிகளிலும் கூட விசிகவிற்கு அமைச்சர் பதவி என்பது எட்டாக்கனவாகவே இருந்தது. அந்த நீண்ட காலக் கனவை விஜய் நிறைவேற்றியுள்ளார். ஆனால்,  திருமாவளவன்,  "நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை, திமுகவோடு நட்பு தொடர்கிறது" என்று பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது. திமுகவும் திருமாவளவனுடன் இன்னும் நட்பு பாராட்டி வருகிறது. 

இந்நிலையில் பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை தவெக அரசு மறுசீரமைத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பட்டியலின, பழங்குடியின எம்பி, எம்.எல்.ஏக்கள் அனைவரும் இக்குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பிரிவைச் சேர்ந்த திருமாவளவன், சசிகாந்த் செந்தில், ஆ.ராசா உள்ளிட்ட 8 எம்.பி.க்கள், 37 எம்எல்ஏக்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழு உறுப்பினர்களாக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றுள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களை தடுப்பதற்கும், சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த உயர்நிலை கண்காணிப்புக் குழு முக்கிய பங்காற்றும். ஆதிதிராவிடர் - பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்கும் மாநில உயர்நிலை குழு மறுசீரமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.