நகை, பணம் கிடைக்காததால் வீட்டை அடித்து நொறுக்கிய திருடன்... சுவரில் 'SORRY' எழுதி வைத்துவிட்டு எஸ்கேப்!
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு, கேரளம் மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
சில நாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன. மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.
சாரி
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது உள்ளார். ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.