×

மறுசுழற்சி பிளாஸ்டிக்னு சொன்னாங்க.. ஆனா லாரியைத் திறந்தா கொட்டும் புழுக்கள்..!

 

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 'கிளீன் கேரளா கம்பெனி லிமிடெட்' (Clean Kerala Company Ltd) நிறுவனத்திடமிருந்து, திருச்சியில் இயங்கி வரும் சிமெண்ட் நிறுவனம் ஒன்று சிமெண்ட் தயாரிப்புக்காக 15,070 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கியுள்ளது. இந்த கழிவுகள் கேரளாவில் இருந்து, லாரி மூலம் திருச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.அந்த லாரி நெல்லை மாவட்டம், துறையூர் வழியாக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் டயர் பஞ்சராகியுள்ளது.

இதனால் துறையூரில், சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு பஞ்சரை சரி செய்ய மெக்கானிக்கை அழைத்து வர அந்த லாரியின் டிரைவர் சென்றுள்ளார். உடனே ஆள் கிடைக்காததால் லாரி நீண்ட நேரமாக அங்கேயே நிற்கும் நிலை உருவானது.

இந்த நிலையில், லாரியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் லாரியின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது, லாரியில் இருந்து ஆயிரக்கணக்கான புழுக்கள் கொத்துக் கொத்தாக சாலையில் கொட்டி, நெளிந்துக் கொண்டிருந்துள்ளன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர், அந்த கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், மறுசுழற்சி செய்யப்பட கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் என கூறி, சுகாதாரமற்ற கழிவுகளைக் கேரளா நிறுவனம் அனுப்பியது அம்பலமானது.

இதற்கிடையில், புழுக்களால் அப்பகுதியில் தொற்றுநோய் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக லாரியைச் சுற்றிலும், சாலையோரத்திலும் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் பிளீச்சிங் பவுடர் தூவி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.