×

நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து முதல்வர் விஜய் படத்தை வைக்கக்கோரி தவெகவினர் வாக்குவாதம்

 

நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து முதல்வர் விஜய் படத்தை அனைத்து அறைகளிலும் வைக்கக் கோரி தவெகவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார். இந்த நிலையில் அவரைப் பின்பற்றக்கூடிய தமிழக வெற்றி கழக தொண்டர்கள், நிர்வாகிகள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து பல்வேறு செயல்களை செய்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்குள் தற்பொழுது திடீரென 50க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக தொண்டர்கள் புகுந்து அனைத்து அறைகளிலும் முதல்வர் விஜய் படத்தை வைக்க கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் குவிந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்து பிரச்சனை செய்து கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடம் கமிஷனர் மோனிகா ராணா பேச்சுவார்த்தை நடத்தினார். 


இருந்த போதிலும் தங்கள் அனைவரையும் கமிஷனருடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்க கோரி கமிஷனர் அறை முன்பாக நின்று கொண்டிருந்த அலுவலர்களிடம் மீண்டும்  கட்சிக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மாநகராட்சி அலுவலகத்திற்குள் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் கமிஷனர் மோனிகா ரானா நாளை அனைத்து அறைகளிலும் முதல்வர் படம் வைக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த கட்சிக்காரர்கள் அனைவரும் மாநகராட்சி அலுவலகத்தை விட்டு கலைந்து சென்றனர். மேலும் நாளையும் படங்கள் அனைத்தும் வைக்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என த.வெ.க.,வினர் தெரிவித்துள்ளனர்.