அடுத்த 6 மாதத்திற்கு உள்ளாட்சி தேர்தல் கிடையாது
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் நேற்று (19.10.2026) அரசாணை பிறப்பித்துள்ளார்.
முதல் கட்டமாக 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 05.01.2025 அன்றே முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் பதவிக்காலம் நேற்றுடன் (19.10.2026) முடிவடைந்தது. இந்நிலையில் புதிதாக தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. இதனையடுத்து ஊரக உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
46 கிராம ஊராட்சிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. புதிதாக 93 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் ஊராட்சி வார்டுகள் மறுசீரமைப்பு (Delimitation) செய்ய வேண்டும் மற்றும் இடஒதுக்கீடு மாற்ற வேண்டும். இது தொடர்பான வழக்கு (W.P. No.30639/2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த பணிகளை முடிக்காமல் தேர்தல் நடத்த முடியாது என்பதால், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 261-A-ன் கீழ் தனி அலுவலர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட 93 கிராம ஊராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இந்த நீட்டிப்பு தொடர்பாக அவசரச் சட்டம் (Ordinance) பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO - Village Panchayat), ஊராட்சி ஒன்றியங்களுக்கு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) / ஊராட்சி ஒன்றிய தணிக்கை உதவி இயக்குநர் மாவட்ட ஊராட்சிகளுக்கு: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் 20.10.2026 முதல் 19.04.2027 வரை பின்வருபவர்கள் தனி அலுவலர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.