சிறைகளில் சாதி பாகுபாடு கூடாது- தமிழ்நாடு அரசு உத்தரவு
சிறைகளில் சாதி ரீதியிலான பாகுபாடு கூடாது தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சிறை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகளும், மூன்று பெண்கள் தனிச்சிறைகளும், மாவட்ட சிறைகள், திறந்த வெளிச் சிறைகள், மற்றும் கிளைச்சிறைகள் என 138 சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது என்றும் இது தொடர்பாக சிறை விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி சிறை விதிகளில் திருத்தம் செய்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. தொடர்பாக மாநில அரசுகளுக்கும் ஒன்றிய உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.
இதன்படி தமிழ்நாடு சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, சிறைகளில் சாதி ரீதியிலான பாகுபாடு கூடாது தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறை ஆவணங்களில் எந்த இடத்திலும் சாதி தொடர்பான தகவல்கள் இருக்கக் கூடாது என்றும் சிறைகளில் சாதி ரீதியிலாக கைதிகள் வகைப்பாடு செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.குறிப்பாக, சாதி அடிப்படையில் சிறையில், கைதிகளுக்கு பணிகள், வேலைகள் வழங்கக் கூடாது என்றும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டத்தை சிறைகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் சிறையில் செப்டிக் டேங், கழிவு நீர் தொட்டி ஆகியவற்றை சுத்தம் செய்ய கைதிகளை அனுமதிக்கக் கூடாது கூடாது என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.