அரசியல் களத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் தமிழர்கள் - எடப்பாடி பழனிசாமி..!
முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் பாடப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தனித்தீர்மானத்திற்கு அதிமுக சார்பாக ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்த அரசின் தனித் தீர்மானத்தை முழு மனதோடு ஆதரித்து எனது கருத்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்மொழியின் பெருமையையும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தையும் போற்றும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு, தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக முதலில் பாடப்பட வேண்டும் என்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வாகும்.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல. அது தமிழ்மொழியின் தொன்மையையும், பெருமையையும், தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தையும் வெளிப்படுத்துகின்றது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை உணர்வால் ஒருங்கிணைக்கும் ஒரு அடையாளமாகவும் அது திகழ்கிறது.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் மற்றும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க பல பணிகளைச் செய்துள்ளது.
இந்த உலகத் தமிழ் மாநாடுகளை திமுக நடத்தி இருக்கிறது இதன் மூலம் மூலம் தமிழின் பெருமை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தமிழ்மொழி தொடர்பான ஆய்வுகள், கருத்தரங்குகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டன. தமிழர்களின் வரலாறும், பண்பாடும் உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது எந்த மொழிக்கும், எந்த இனத்திற்கும், எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. தமிழர்கள் தங்களுடைய தாய்மொழிக்கு செலுத்தும் மரியாதையும் வணக்கமும்தான் தமிழ்த்தாய் வாழ்த்து.
நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். அதே அளவிற்கு நாம் தமிழர்கள் என்பதிலும் பெருமை கொள்கிறோம். இந்தியத் தன்மையும், தமிழர் அடையாளமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.
அரசியல் களத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழ் என்று வரும்போது நாம் அனைவரும் தமிழர்கள். தமிழ்மொழியின் உரிமை, வளர்ச்சி மற்றும் பெருமை என்று வரும்போது, இந்தப் பேரவை ஒரே குரலில் நிற்க வேண்டும்.
அந்த அடிப்படையில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என்ற இந்த அரசின் தனித் தீர்மானத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முழு மனதோடு ஆதரிக்கிறேன்.
தமிழ் வாழ்க!
தமிழர் வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!” என்றார்.