டில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்..!!
தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரசின் செயல்பாடுகள் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
கர்நாடகாவை சேர்ந்த வெங்கட் நாராயணா தமிழக நலன்களுக்காக எப்படி குரல் கொடுப்பார் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், வெங்கட் நாராயணா நியமனத்தில் எந்த தவறும் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
ஈரோட்டில் அவர் அளித்த பேட்டி; பொதுவாக அரசின் பிரதிநிதிகள் நியமனம் என்பது கொள்கை முடிவு. இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் அதில் சம உரிமை இருககிறது. பிரதிநிதி என்றாலே அவர்கள் இந்தியாவுக்குத்தான், டில்லிக்குத்தான் போகிறார்கள். எனவே அதில் பெரிய தவறு ஒன்றும் கிடையாது.
நூற்றுக்கு நூறு சதவீதம் முதல்வரால் நியமிக்கப்பட்ட அனைவரும் தமிழகத்திற்காக குரல் கொடுப்பார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் அனைத்து திட்டங்களையும் மத்திய அரசின் திட்டங்களாக இருக்கட்டும், நதிநீர் பிரச்னைகளாக இருந்தாலும் சரி.முழுமையாக அதற்காக வாதிடுவதற்கும், குரல் கொடுப்பதற்கும் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் தயாராக இருப்பார்கள்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.