"நாங்கள் புதியவர்கள் என்று சொல்வதில் பயனில்லை!" – தூத்துக்குடி படுகொலை விவகாரத்தில் தவெக அரசை விளாசிய வானதி சீனிவாசன்!
பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அதிகாலையில் மர்ம நபர்கள் வீடு புகுந்து நடத்திய பயங்கரத் தாக்குதலில் 3 குழந்தைகளின் தாய் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
ஆட்சி மாற்றம் வந்து 6 மாதங்களாகியும் இன்னும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டாத ஆட்சியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தினமும் சர்வ சாதாரணமாக நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் சுட்டிக் காட்டுகிறது. இன்னமும் தவெக அரசு நாங்கள் புதியவர்கள் எங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று கூறிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.
மேடைக்கு மேடை நாங்கள் தூய சக்தி என்று கூறி மக்களிடம் பெற்ற ஓட்டுக்கள் அவர்களைப் பாதுகாக்கவும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமே தவிர, தினமும் நடக்கும் கொலைகளையும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதுகாப்பற்ற நிலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அல்ல என்பதை தவெக அரசு எப்போது உணரப் போகிறது?
இக்கொடூர குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.