×

இலாகா இல்லை.. அதிகாரமும் இல்லை..! பதவியேற்று 7 மாதங்களாகியும் இலாகா ஒதுக்காததால் பாஜக அமைச்சர் கடும் கோபம்..!

 

அமைச்சர் ஜான்குமார் அமைச்சராகப் பொறுப்பேற்று 7 மாதங்கள் கடந்துவிட்டன (கடந்த ஜூலை 14-ம் தேதி பதவியேற்றார்). ஆனால், இன்று வரை அவருக்கு எந்தவிதமான துறைகளும் ஒதுக்கப்படவில்லை. இதனால் கடும் விரக்தியில் இருக்கும் அவர், இது குறித்து செய்தியாளர்களிடம் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சராகப் பொறுப்பேற்று இத்தனை நாட்களாகியும் இலாகா வழங்காதது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. இலாகா இல்லாத அமைச்சராக என்னை அழைக்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது. சமீபத்தில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் இதே நிலைதான் நீடித்தது. எனது தொகுதி மக்கள் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்தியாவையே ஆளும் பா.ஜ.க-வின் அமைச்சருக்கே இந்த நிலைமையா என்று மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க-வை அந்தளவுக்குத் தனது கட்டுக்குள் வைத்திருக்கிறாரா என்று பேசத் தொடங்கிவிட்டார்கள்.

எனக்கு இலாகா வழங்கக்கூடாது என்பதில் ஏதோ ஒரு சதி நடக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி என்னை அவரது கட்சியான என்.ஆர். காங்கிரஸில் சேர அழைத்தார். அதற்கு நான் மறுத்ததாலேயே தற்போது எனக்கு இலாகா தர மறுக்கிறார். புதுச்சேரியை சிறந்த மாநிலமாக (Best Puducherry) மாற்ற வேண்டுமென்றால், இங்கு பா.ஜ.க-வின் நேரடி ஆட்சி அமைய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரியின் வளர்ச்சிக்காக அழைத்து வந்ததாகவும், ஆனால் அவர் தற்போது பா.ஜ.க வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே சமயம், முதலமைச்சர் ரங்கசாமியை தான் ஒரு 'சித்தராக' பார்ப்பதாகத் தெரிவித்த அவர், பா.ஜ.க-வை விட்டு வெளியேறுவீர்களா என்ற கேள்விக்கு, "அவர்களை விட்டு யாரும் செல்ல முடியாது" என்று பதிலளித்தார்.