யுபிஐ சேவைக்கு கட்டணம் இல்லை - நிர்மலா சீதாராமன்
யுபிஐ தொடங்கப்பட்டதிலிருந்தே நுகர்வோருக்கு இலவசமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் செலுத்தாமல் இந்த உடனடி டிஜிட்டல் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதா விவாதத்தின் போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “Taxation and Other Laws Amendment Bill 2026, Payment and Settlement Systems Act 2007 இன் பிரிவு 10A வை திருத்த முன்மொழிகிறது. இந்த திருத்தம் ஒரு சட்டபூர்வமான அதிகாரத்தை வழங்கும் ஏற்பாடு மட்டுமே. இது UPI பயனர்களிடம் எந்தவிதமான வரியையோ அல்லது பரிவர்த்தனை கட்டணத்தையோ உடனடியாக விதிக்காது. அரசு அறிவிப்பு மூலம், எந்தெந்த மின்னணு பணப்பரிவர்த்தனை முறைகளுக்கு கட்டணத்திலிருந்து சட்டபூர்வ பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்பதை குறிப்பிடுவதற்கான அதிகாரத்தை இந்த திருத்தம் அரசுக்கு வழங்குகிறது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், NPCI தலைமையிலான UPI மற்றும் Services Steering Committee, Merchant Discount Rate எனப்படும் MDR கட்டணம் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா என்பதையும், அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டால் அதன் வரம்பு மற்றும் நடைமுறை அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் பரிசீலித்து முடிவு செய்யும். எனவே, தற்போதைய நிலையில் UPI பரிவர்த்தனைகளுக்கான எந்தவொரு MDR கட்டண முறையும் இறுதி செய்யப்படவில்லை” என்றார்.