×

“இளைஞர்களின் எழுச்சி மோடி அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை எழுதத் தொடங்கியுள்ளது”- ஜவாஹிருல்லா

 

இளைஞர்களின் எழுச்சி மோடி அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை எழுதத் தொடங்கியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் மக்களின் ஒற்றுமையான போராட்டம் அதிகார ஆணவத்தை வீழ்த்த முடியும் என்பதற்கான வரலாற்றுச் சான்றாகும்.கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் “மோடி அரசு ஒருபோதும் பின்வாங்காது” என்ற பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஆனால் வரலாறு வேறு கதையைத்தான் சொல்கிறது. 2015-இல் நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை மக்கள் எதிர்ப்பால் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 2018-இல் #MeToo இயக்கத்தின் எழுச்சியால் அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவி விலகினார். 2021-இல் ஒரு ஆண்டுக்கும் மேலாகப் போராடிய விவசாயிகளின் உறுதியால் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. இன்று தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளது. அதிகாரத்தின் அகந்தையை உடைக்கக்கூடிய மிகப் பெரிய சக்தி மக்களின் ஒற்றுமையான ஜனநாயகப் போராட்டமே என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது.

இந்தப் போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தை பாஜக தலைமையிலான ஒன்று அரசு உணர வேண்டும். இன்று தெருக்களில் நின்றவர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் புதிய தலைமுறை. இந்த தலைமுறையினர் 2014-க்கு முன்பான அரசுகளை நினைவில் வைத்திருப்பவர்கள் அல்ல. அவர்களுக்கு தெரிந்த ஆட்சி மோடி அரசுதான். எனவே கடந்த கால அரசுகளை குறை கூறி தப்பிக்க முடியாது. வேலைவாய்ப்பின்மை ஏன் அதிகரித்தது? கல்வி ஏன் வணிகமயமாக்கப்பட்டது? தேர்வுகள் ஏன் மீண்டும் மீண்டும் கசிகின்றன? இளைஞர்களின் எதிர்காலம் ஏன் நிச்சயமற்றதாக மாறியுள்ளது? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது தற்போதைய அரசின் கடமையாகும்.கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் நடைபெற்ற NEET, CUET, UGC-NET, JEE உள்ளிட்ட பல்வேறு தேசியத் தேர்வுகளில் ஏற்பட்ட கசிவுகள், தேர்வு ரத்துகள், நிர்வாகக் குழப்பங்கள் ஆகியவை மாணவர்களின் நம்பிக்கையை கடுமையாக பாதித்துள்ளன. கல்வி அமைச்சகம் இந்தப் பிரச்சினைகளில் பொறுப்பேற்காமல், விமர்சனங்களை மறுப்பதிலேயே அதிக அக்கறை காட்டியது. அமைச்சர் மாறினாலும், இந்தத் தோல்விகளுக்குக் காரணமான நிர்வாக அணுகுமுறை மாறாவிட்டால் மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது.

புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியை மையப்படுத்தும் முயற்சி, மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டின் சமூகநீதிக் கொள்கைக்கு எதிரான நீட் திணிப்பு, இந்தி மற்றும் சமஸ்கிருத ஆதிக்கத்தை ஊக்குவிக்கும் போக்கு, பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமனங்களில் ஒன்றிய அரசின் அதிகரித்த தலையீடு ஆகியவை மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.மாணவர்கள் அமைதியாகக் கேள்வி கேட்டால் அவர்களை தேசவிரோதிகளாகச் சித்தரிப்பதும், போராட்டம் நடத்தினால் காவல்துறையை ஏவுவதும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தால் வழக்குப் பதிவு செய்வதும் ஜனநாயக ஆட்சியின் அடையாளமல்ல. கருத்து வேறுபாட்டை குற்றமாகக் கருதும் அரசுகள், வரலாற்றில் ஒருபோதும் நீண்ட காலம் நிலைத்ததில்லை.

தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் ஒரு முடிவு அல்ல; அது ஒரு தொடக்கம். இன்று மாணவர்கள் எழுப்பிய குரல் நாளை வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் குரலாக மாறும்; விவசாயிகளின் குரலாக மாறும்; தொழிலாளர்களின் குரலாக மாறும்; மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் மக்களின் குரலாக மாறும். ஜனநாயகத்தின் அடிப்படை உண்மையை மோடி அரசு புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் ஒப்புதலால் கிடைத்த அதிகாரம், மக்களின் எதிர்ப்புக்கு முன் நிரந்தரமாக நிலைத்திருக்க முடியாது.தமிழ்நாடு தொடர்ந்து சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம், மொழி உரிமை, மாநில சுயாட்சி மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடி வருகிறது. மாணவர்களின் இந்த எழுச்சி அந்தப் போராட்டத்தின் தேசிய வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.ஒன்றிய அரசு தனது ஆணவ அரசியலைக் கைவிட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், கல்வி நிர்வாகத்தில் முழுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். 2024 தேர்தல் பாஜகவிற்கு அரசியல் எச்சரிக்கையாக இருந்தது என்றால், இளைஞர்களின் இந்த எழுச்சி எதிர்கால அரசியல் மாற்றத்திற்கான முன்னுரையாக அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.