சுதந்திரத்திற்கு பின் இதுவரை இல்லாத மோசமான அறிவிப்பு! தவெக அரசை சாடிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்..!
அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதியின் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது
"தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அரசின் நடவடிக்கை உள்ளது. தவெகவின் தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன்கள் முழுமையாக ரத்துச் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் தற்போதைய விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும், பொதுமக்களும் கண்டித்துள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத ஒரு மோசமான அறிவிப்பு இது. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை சொன்னபடி நிறைவேற்ற வேண்டாமா? அதைத்தான் விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. வரும் ஜூன் 30- ஆம் தேதி விவசாயக் கடன்கள் செலுத்தப்பட வேண்டும். அப்போதுதான் புதிய கடன் பெற முடியும். அனைவருடைய கண்டனத்தையும், எதிர்ப்பையும் இவர்கள் பெற்றிருக்கின்றனர். இந்த பயிர்க்கடன் தள்ளுபடியை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், வரும் ஜூன் 01- ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.