×

 ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!!

 

தமிழகத்தில் காஞ்சிபுரம், நெல்லை, கள்ளக்குறிச்சி ,செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊராட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் விடுபட்ட இடங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 12ஆம் தேதி நடந்தது.  இதில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் பதவி ஏற்கின்றனர்.  27,792  உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவி ஏற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும்,   வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்கின்றனர்.  அத்துடன் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவி பிரமாணம் இன்று நடைபெறுகிறது.

இதனிடையே 9 மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் துணைத் தலைவர் மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வருகிற 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.இன்று பதவியேற்கவுள்ள  உள்ளாட்சி பிரதிநிதிகள் 22ம் தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பதவி ஏற்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கின்றனர். 

ஒருவேளை ஊராட்சி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்காவிட்டால்,  உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து துணை தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலில் அவர்கள் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.