வெளியுலக தொடர்பை இழந்த அடுக்கம் கிராமம்! - துண்டிக்கப்பட்ட பெரியகுளம் - கொடைக்கானல் போக்குவரத்து!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விடிய விடியக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாகப் பெரியகுளம் மற்றும் கொடைக்கானலை இணைக்கும் அடுக்கம் மலைப்பாதையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.
மலைப்பாதையின் பல்வேறு இடங்களில் ராட்சதப் பாறைகளுடன் மண் சரிந்து விழுந்ததில், சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால் பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் ஆகிய இரு நகரங்களுக்கும் செல்ல முடியாமல் அடுக்கம் கிராம மக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர். அத்தியாவசியத் தேவைகளுக்கோ அல்லது விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவோ வழி இன்றி, அடுக்கம் கிராமம் வெளி உலகத் தொடர்பை இழந்து தனித்தீவாக மாறியுள்ளது.
தொடர்ந்து நிலவி வரும் அபாயகரமான சூழலைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுக்கம் மலைப்பாதை தற்காலிகமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது. மேலும், "மலைப்பாதையில் சாலை முற்றிலும் சேதமடையும் அபாயம் உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எவரும் இந்த சாலையைப் பயன்படுத்த வேண்டாம்" என மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.
தற்போது கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வத்தலக்குண்டு-பெருமாள்மலை பிரதான சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. மழை தணிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினர் ராட்சதப் பாறைகளையும் மண் குவியல்களையும் அகற்றும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.