×

திமுக ஆட்சியை போன்றே தான் தவெக அரசும் செயல்படுகிறது! – கோவை சிறுமி பாலியல் வழக்கில் வானதி சீனிவாசன் கண்டனம்!

 

​கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் உள்ள வஞ்சியம்மன் நகரை அடுத்துள்ள திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (36). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஓட்டுநர் சங்கர் இரண்டு தினங்களுக்கு முன்னர் பக்கத்து ஊரில் உள்ள தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த உறவினரின் வீட்டுக்கு வெளியே அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

​சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருப்பதை நோட்டமிட்ட ஓட்டுநர் சங்கர், அக்குழந்தைக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, ரகசியமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன அந்தச் சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் சென்று சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

​இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், அரசு பேருந்து ஓட்டுநர் சங்கர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

​இதனைத் தொடர்ந்து தலைமறைவாக முயன்ற சங்கரை போலீசார் அதிரடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவரே குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கைது செய்யப்பட்ட இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை தொண்டாமுத்தூர் அருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாக அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள செய்தியானது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. 

பெண்களை தாயாக, சகோதரியாக, மகளாகப் பார்க்கும் அறம் மாறி, இன்று வக்கிரபுத்தியால் குழந்தைகளிடம் கூட அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. போக்சோ சட்டங்கள் மூலமாகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் சற்றும் குறைந்தபாடில்லை.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்திருப்பது பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு தோல்வியடைந்து கடந்த திமுக ஆட்சியைப் போன்றேதான் செயல்படுகிறது.

பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப் பெண் படை வந்துவிட்டது என்று பெருமிதம் கொண்ட முதலமைச்சர் அவர்கள் அதனை துவக்கி வைத்ததோடு தனது கடமை முடிந்து விட்டது எனக் கருதாமல் தொடர்ந்து சிறப்புற இயங்குவதைக் கண்காணித்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முற்றிலும் களையும் வகையில் நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.