அடுத்தடுத்து அதிரடி காட்டும் த.வெ.க அரசு! 60,000 டயர் வாங்கும் மெகா டெண்டர் திடீர் ரத்து!
அரசு போக்குவரத்து கழகங்களுக்கான, 500 புதிய பஸ்கள், மாநகர போக்குவரத்து கழகத்துக்கு, 300 'ஏசி' மினி பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர்கள், ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, 60,000 புதிய டயர்கள் வாங்குவதற்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
'டயர், கியர் பாக்ஸ்' உள்ளிட்ட உதிரிபாகங்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. இதில், டயர் மட்டும், மாதம்தோறும் 8,000 வரை தேவைப்படுகின்றன.எனவே, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, 60,000 டயர்கள் வாங்க, கடந்த மார்ச் மாதத்தில் டெண்டர் வெளியிடப்பட்டது. அந்த டெண்டரை, தற்போதைய த.வெ.க., அரசு ரத்து செய்துள்ளது.
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ்களை தடையின்றி இயக்க, போக்குவரத்து துறையில், போதிய அளவில் டயர்கள் இருக்கின்றன. அடுத்த ஓரிரு மாதத்தில் புதிய டெண்டர் வெளியிட்டு, கூடுதல் சிறப்புடன் கூடிய டயர்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.