ரூ.2,500 எப்போது தரப்படும் என்ற கேள்விக்கு தவெக அரசிடம் பதில் இல்லை - எல்.முருகன்..!!
Jun 16, 2026, 14:32 IST
சட்டப்பேரவைத் தேர்தலின்போது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நம்பி தமிழகத்தின் பல லட்சக்கணக்கான பெண்கள் தவெகவுக்கு வாக்களித்தனர்.
மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவெக அரசு முழுமையாக தோல்வியடைந்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையிலும், பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவது தொடர்பாக எந்த உறுதியான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மாறாக, திமுக அரசு வழங்கி வந்த ரூ.1,000 உரிமைத்தொகையே தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும் அதே ரூ.1,000 மட்டுமே பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் முழங்கிய ரூ.2,500 வாக்குறுதி என்ன ஆனது? பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே இந்த வெற்று வாக்குறுதியை தவெக வழங்கியதா?
ரூ.2,500 எப்போது தரப்படும் என்ற கேள்விக்கு தவெக அரசிடம் பதில் இல்லை. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படி பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அறிவித்தபடி அன்னபூர்ணா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்படுகிறது. பெண்களுக்கு ரூ,3000 வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது பாஜக. ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன?
வாக்குறுதியை பற்றி கேள்வி எழுப்பினால், மாநிலத்தின் கடன் சுமையை காரணம் காட்டி முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் விளக்கம் அளிக்கின்றனர். மாநிலத்தின் நிதிநிலை மற்றும் கடன் விவரங்கள் தெரியாமல் இந்த வாக்குறுதியை அளித்தீர்களா? தேர்தலுக்கு முன்பே அரசின் நிதிநிலை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படியிருக்க, நடைமுறையில் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியது ஏன்?
ஒரு அரசின் திறமை என்பது தேர்தல் மேடைகளில் வசனம் பேசுவதில் இல்லை; கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், திறமையான நிர்வாகத்தை வழங்குவதிலும்தான் உள்ளது. ஆனால், தற்போதைய தவெக அரசு நிர்வாக அனுபவமின்மையால் திணறுகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் நடமாட்டம் போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதிலும் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தேர்தல் காலத்தில் அண்ணன், தம்பி, மாமா என்ற உணர்வுபூர்வமான பேச்சுகளால் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று அந்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, மக்கள் நலன் ஆகியவை வெறும் தேர்தல் முழக்கங்களாக மட்டுமே இருந்தனவா என்பதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
எனவே, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை தவெக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், இது மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மிகப்பெரிய தேர்தல் மோசடி என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது. தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் தாங்கள் அளித்த நம்பிக்கைக்கு உரிய பதிலை முதல்-அமைச்சரிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.