தங்கமும் பணமும் தரும் தமிழக அரசு! தங்கத்தை இலவசமாக கொடுக்கும் தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டங்கள்..!!
தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களுக்கு திருமண நிதியுதவி திட்டங்களில் ஒரு பவுன் தங்கத்தை இலவசமாகவே அரசு கொடுக்கிறது. 8 கிராம் வரை தங்கம் மற்றும் நிதியுதவியை பெற்றுக் கொள்ளலாம். அவை எந்த திட்டங்கள்? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் திருமண நிதியுதவி திட்டம் ஏன்?
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அத்தகைய பெற்றோருக்கு உதவவும், அவர்களின் மகள்களை சரியான வயது வரை படிக்க ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசால் திருமண உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் , கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
8 கிராம் திருமண உதவித் திட்டம்
இத்திட்டத்தில் பயனாளியாக மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினராக இருந்தால் மணமகள் 5 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்தால் ரூ. 25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும். இன்னொரு திட்டமும் இருக்கிறது. அதில், கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தொலைதூரக் கல்வி, அரசு அங்கீகாரம் பெற்ற திறந்த நிலைப் பல்கலைக்கழகம் படித்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள். அந்த பெண்களுக்கு 50,000 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்
இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் மின்னணு மூலம் ரூ.15,000 நிதியுதவியும், தேசிய சேமிப்புச் சான்றிதழாக ரூ.10,000ம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பட்டம், பட்டயம் படித்தவர்களுக்கு ரூ.50,000 கொடுக்கப்படும். அதில் ரூ.30,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழுடன், 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்
இத்திட்டம் ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.25,000 நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும் பயனாளிக்கு வழங்கப்படுகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு எனில் ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்
இந்தத் திருமண உதவித் திட்டத்தின் கீழ், பயன் பெறுவதற்கு வருமான உச்சவரம்பு மற்றும் குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. பயனாளிகளுக்கு ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு எனில் ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
5. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ.25,000 நிதியுதவில், ரூ.15,000 நேரடியாக வங்கிக் கணக்குக்கும், ரூ10,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. பட்டம், பட்டயப்படிப்பு பெற்றவர்களுக்கு ரூ.50,000, அதில் ரூ.30,000 வங்கி கணக்குக்கும், ரூ.20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. வருமான உச்சவரம்பு மற்றும் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
கலப்பு திருமணத்தின் வகைகள்
1. கலப்பு திருமண தம்பதிகளின் துணைவர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருக்க வேண்டும் அதே சமயம் மற்ற ஒருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2. வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் முன்னேறிய அல்லது பொதுப்பிரிவை சேர்ந்தவர்களாகவும், மற்ற ஒருவர் பிற்பட்ட/மிகவும் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
இத்திட்டங்கள் அனைத்தும் பெண்களின் கல்வியையும், நிதி பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு சமூக நீதி கண்ணோட்ட திட்டங்களாகும். மேலும், ஏழை எளிய தமிழ் குடும்பங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யவும், சமூகத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் இத்திட்டங்கள் பறைசாற்றுகின்றன. எனவே, தமிழ்நாட்டு மக்கள் இத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளவும்.