×

"குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு!" - திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்..!

 

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று மாலை தமிழகம் வந்தார் தமிழக பா.ஜ.கவின் தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல்.இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, “குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” என்ற தலைப்பில் திமுக அரசின் மீதான ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒரு விரிவான அறிக்கையை பியூஷ் கோயல் வெளியிட்டார்.

பா.ஜ.க வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு அறிக்கையில் சில முக்கிய புள்ளிவிவரங்களும் இடம்பெற்றுள்ளன. அதில் தமிழகத்தில் பாலியல் அத்துமீறல்கள் 2022-ஆம் ஆண்டில் 1,414 ஆக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் அது 1,885 ஆக அதிகரித்துள்ளது. போக்சோ (POCSO) வழக்குகள் 2022-இல் 4,968 லிருந்து 2024-இல் 6,969 ஆக உயர்ந்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகள் 2022-இல் 3,260 என்ற எண்ணிக்கையில் இருந்து 2024-இல் 5,319 ஆகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பாதுகாப்பற்ற சூழ்நிலையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் நோக்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இது ஒரு முக்கிய ஆதாரமாக அமையும் என்றும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த இந்த குற்றப்பத்திரிகை தற்போது அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த அறிக்கை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னையில் இன்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள் விரோத விடியா தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு எதிராக நடந்த கொடூர குற்றங்கள், மேலும் புனிதமான தமிழக மண்ணை போதை கலாச்சாரத்தின் மூலம் சீரழித்த செயல்கள் குறித்து விரிவாக பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.

தமிழகத்தை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளிய இந்த ஆட்சியின் செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில், மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர் திரு.பியூஷ் கோயல் அவர்களின் தலைமையில் இந்த குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது. மக்கள் விரோத திமுக ஆட்சியின் செயல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வைப் பெற, இந்த குற்றப்பத்திரிக்கை முக்கிய ஆதாரமாக அமைகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.