×

அதிமுகவில் வெடித்தது பிளவு! எடப்பாடி பழனிசாமி - வேலுமணி இடையே கடும் போட்டி..!

 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுகவில் கடும் குழப்பமும், அதிருப்தி குரல்களும் எழுந்துள்ளன. 

அதிமுகவில் ஒட்டுமொத்தமாக உள்ள 47 எம்எல்ஏக்களில் 30 பேர் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலும், எஞ்சிய 17 எம்எல்ஏக்கள் இபிஎஸ்சுக்கு ஆதரவாகவும் உள்ளனர். இதனால் அதிமுக சட்டசபை குழு தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற குழப்பம் நிலவியது. 

சட்டசபை கூட்டத்தொடரின் போது, அதிமுக எம்எல்ஏக்களில் 17 எம்எல்ஏக்கள் இபிஎஸ்சை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக கூறி அதற்கான கடிதத்தை தற்காலிக சபாநாயகரிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் எம்எல்ஏக்கள் 30 பேர் தலைமைச் செயலகம் வந்தனர். தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து எஸ்.பி. வேலுமணி கட்சியின் சட்டசபைக் குழு தலைவராக செயல்படுவார் என்று கூறி அதற்கான ஆதரவு கடிதங்களை அளித்தனர். மேலும் கட்சி கொறடாவாக சி. விஜயபாஸ்கர் செயல்படுவார் என்றும் கூறி, அதற்கான கடிதத்தையும் ஒப்படைத்தனர். 

இந்த ஆதரவு கடிதங்களை தொடர்ந்து, அதிமுகவின் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது, உறுதியாகி இருக்கிறது.தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியில் வந்த சி.வி.சண்முகத்தை அங்கிருந்த நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளை எழுப்பினர். அவர்களிடம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், சற்று நேரத்தில் அனைத்தும் தெரியவரும் என்று பதிலளித்தபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.