×

பெற்றோர் கண்டித்ததால் நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன மகன்

 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆன்லைன் விளையாடிய மகனை பெற்றோர் கண்டித்ததால், வீட்டில் இருந்து ரூ.33 லட்சம் பணம் மற்றும் 213 சவரன் நகையை எடுத்துக்கொண்டு நேபாளத்திற்கு தப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மொட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் குமார். இவர் சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மனைவி அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் 15 வயதுடைய இரண்டாவது மகன் வீட்டில் எந்நேரமும் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்ததாகவும், அதனால் வீட்டில் உள்ள அனைவரும் சிறுவனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் 17ஆம் தேதி இரவு  வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது பீரோவில் இருந்த முப்பத்தி மூன்று லட்சம் ரூபாய் பணம், 213 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் சைபர் கிரைம் போலீசார்  உதவியுடன் சிறுவனின் செல்போன் நம்பரை வைத்து கண்காணித்ததில் தாம்பரம் பகுதியில் சிறுவன் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. ஆனால் அதற்குள் சிறுவன் நகைகளை அடமானம் வைப்பதற்காக  மணி கோல்டு நிறுவனத்திற்கு சென்றபோது  ஊழியர்கள்  சந்தேகப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக தாம்பரம் சென்ற போலீசார் சிறுவனையும் நகைகளையும் பத்திரமாக மீட்டனர். விசாரணையில் பெற்றோர், ஆன்லைன் கேம் விளையாட அனுமதிக்க மறுத்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துச் சென்றதாகவும், நகையை தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில் அடகு வைக்க முயற்சித்து, பணத்திற்காக காத்திருந்ததாகவும் தெரியவந்தது. மேலும் நேபாளம் செல்வதற்காக 44 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.