×

அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்.. இனி 50,000 மேல் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை..! 

 

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, 2026 சட்டப்பேரவை தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமான இருமுனைப் போட்டி என்பது மாறி, இம்முறை மும்முனை அல்லது சதுரங்கப் போட்டியாக தேர்தல் களம் காட்சியளிக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதான கட்சிகளான திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி இடையே தான் நேரடி போட்டி இருக்கும். தற்போது நடிகர் விஜய் "தமிழக வெற்றிக் கழகம்" என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்து உள்ளதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முழு அட்டவணை 

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் தேதி: மார்ச் 30

வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: ஏப்ரல் 6

வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் தேதி: ஏப்ரல் 7

வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 9

வாக்குப்பதிவு நடைபெறும் தேதி: ஏப்ரல் 23

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி:  மே 4

ஒரு மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். தேர்தலை சுதந்திரமாக, வெளிப்படை தன்மையுடன் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் தொகுப்பே தேர்தல் நடத்தை விதிகள் ஆகும். தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே இந்த நன்னடத்தை விதிகள் அந்த மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும். தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும். 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே இந்த நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். அத்துடன் மாநில அரசு முழுமையாக தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதன்படி நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அரசின் சார்பில் எந்த விதமான புதிய மக்கள் நலத் திட்டங்களையும், சலுகைகளையும், புதிய மானியங்களையும் அறிவிக்க முடியாது. அமைச்சர்கள் தங்களின் பிரச்சாரங்களுக்காக அரசின் வாகனங்கள், அரசு விமானம் அல்லது அரசு அதிகாரிகளை பயன்படுத்த முடியாது. அதேபோல எந்த ஒரு அரசுத் துறையிலும் புதிய பணி நியமனங்கலையோ அல்லது அதிகாரிகளின் இடமாற்றங்களையும் செய்ய முடியாது. ஏதேனும் அவசர தேவைகள் இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி உடன் செய்து கொள்ளலாம். 

இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசியல் கட்சிகள் மற்றும் அமைச்சர்களை தாண்டி சாமானிய மக்களுக்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் முக்கியமாக தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தவிர்க்க தீவிர வாகனை வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த சமயங்களில் ரொக்கமாக ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி இருக்காது. அப்படி எடுத்துச் சென்றால் அதற்கான முறையான ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அந்த பணத்தை தேர்தல் ஆணையம் கைப்பற்றிக் கொள்ளும். மேலும் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பட்டுப்புடவை, நகை, பாத்திரங்கள் மற்றும் இதர பரிசு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. அப்படி வேறு ஏதும் காரணங்களுக்காக கொண்டு செல்ல முயன்றால் அதற்கான சரியான ஆவணங்களை வைத்திருப்பது அவசியம். அதேபோல பொதுமக்கள் பெரிய அளவில் ஆன கூட்டங்களை கூட்டுவதற்கும் ,போராட்டங்களை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். 

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தவுடன் எந்த ஒரு அரசியல் கட்சியும் சாதி அல்லது மத உணர்வுகளை தூண்டும் வகையில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்யக் கூடாது. மதத் தலங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட தளங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது. வாக்குப்பதிவு நடைபெறும் நாளைக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக அனைத்து பிரச்சாரங்களையும் முடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பிரச்சாரம் செய்தால் அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய கூட தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிகள் அனைத்தும் தேர்தல் முறையாக நடத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.