முதல் மனைவி மகன் பொங்கல் பரிசு வாங்கியதால் வந்த வினை! ரேஷன் கடை ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி..!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கைரேகை பதிவு இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற தம்பதியினரை போலீஸார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குளம் அருகிலுள்ள துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரமேஷ் (42), தனது இரண்டாவது மனைவி மகாலட்சுமியுடன் (35) அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்றுள்ளார். தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்காக அவர்கள் ரேஷன் கார்டை விற்பனையாளர் ராசுக்குட்டியிடம் வழங்கியுள்ளனர்.
அட்டையைப் பரிசோதித்த விற்பனையாளர், ரமேஷின் முதல் மனைவியின் மகன் ஏற்கனவே பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் மகாலட்சுமி, "எங்களுக்குத் தெரியாமல் எப்படிப் பரிசுத் தொகுப்பை வழங்கலாம்?" எனக் கேட்டு விற்பனையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், விற்பனையாளரை அவதூறாகப் பேசிய தம்பதியினர் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், மேசையிலிருந்த கைரேகை பதிவு இயந்திரத்தை (Biometric Device) பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தம்பதியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.