×

பொதுமக்கள் வியப்பு..! 200 கிலோ பேரிச்சம் பழத்தால் உருவான விநாயகர் சிலை...!

 
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து விதவிதமாக அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான நைவேத்யங்களை படைத்து பூஜை செய்கின்றனர்.

இதேபோல் கோவில்கள், இந்து அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், நிறுவனங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளது.

அவ்வகையில், சென்னை நந்தனம் சிஐடி நகரில் விநோதமான முறையில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 200 கிலோ பேரிச்சம் பழத்தைப் பயன்படுத்தி விநாயகர் சிலை உருவாக்கியதாக சிலையை வடிவமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேரிச்சம் பழ பிள்ளையார் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில், பேரிச்சம் பழம் மட்டுமல்லாமல், 5 கிலோ முந்திரி, ஏலக்காய், மயில் இறகுகள் மற்றும் 2 கிலோ பத்து ரூபாய் நாணயங்களும் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.