தமிழகத்தின் பெருமை..! யு-19 கிரிக்கெட் வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி பாராட்டு..!
ஐசிசி ஆடவர் யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாவே மற்றும் நமீபியா நாட்டில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றியை பெற்றது.
இதன் மூலம் யு19 உலகக் கோப்பை தொடரில் இந்தியா 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது. இந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர்களான ஆர்.எஸ். அம்பிரிஷ் மற்றும் தீபேஷ் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
வேகப்பந்து வீச்சாளர்களான இருவரும் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு பெரும் பங்காற்றினர். இதனையடுத்து உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களை தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரவழைத்து கெளரவித்தார்.
சென்னை அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகமான குறிஞ்சி இல்லத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, கிரிக்கெட் வீரர்கள் தீபேஷ் மற்றும் அம்பிரிஷ் இன்று நேரில் சந்தித்தனர். அப்போது வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை போற்றி, பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தீபேஷ் மற்றும் அம்பிரிஷ் இருவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தீபேஷ் மற்றும் அம்பிரிஷ் ஆகியோரின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை முதன்மை செயலாளர் சத்ய பிரதா சாஹு, தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.