×

பரந்தூர் நிலங்களின் விலை 50 சதவீதம் வரை சரிந்தது..!!

 

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்கப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முன்பு சாதாரண விவசாயப் பகுதியாக இருந்த பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார நிலங்கள் மீது பலரின் கவனம் திரும்பியது. இதனால் ஏக்கருக்கு சுமார் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்த விவசாய நிலங்களின் விலை ரூ.18 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை உயர்ந்தது. சில பகுதிகளில் நிலங்களின் மதிப்பு 100 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை அதிகரித்தது.

கடந்த ஆண்டு சில பகுதிகளில் சாதாரண லே-அவுட் பிளாட்டுகளின் விலை ஒரு சதுர அடிக்கு ரூ.1,600 முதல் ரூ.1,850 வரை உயர்ந்தது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சிறப்பு வாய்ந்த பகுதிகளில் ஒரு சதுர அடி ரூ.2,200 முதல் ரூ.2,999 வரை விலை உயர்ந்தது.

இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுவதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு பரந்தூர் நிலச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அங்கு முதலீடு செய்து நிலங்களை வாங்கியவர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். சில நிறுவனங்கள் லே-அவுட் அமைக்கும் திட்டத்துடன் பல ஏக்கர் நிலங்களை வாங்கிய நிலையில், இனி அந்த நிலங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

பரந்தூரில் கடந்த ஆண்டு ஒரு சதுர அடிக்கு ரூ.1,400 முதல் ரூ.1,650 வரை இருந்த நிலங்களின் விலை தற்போது ரூ.600 முதல் ரூ.900 வரை குறைந்துள்ளது. ரூ.1,600 முதல் ரூ.1,850 வரை இருந்த சாதாரண லே-அவுட் பிளாட்டுகளின் விலை ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை சரிந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சிறப்பு வாய்ந்த பிளாட்டுகளின் விலை ரூ.2,999-ல் இருந்து ரூ.1,800 வரை வந்துள்ளது. மொத்தத்தில், விமான நிலையத் திட்டத்தை மட்டுமே நம்பி உயர்ந்திருந்த நிலங்களின் மதிப்பு சுமார் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளது.