☰
×

"தங்கம் போல் உயர்ந்த விலை... கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.220!" – நீலகிரி விவசாயிகள் செம மகிழ்ச்சி!

 

கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை, மசகல், தீனட்டி, கதவுத்தொரை, ஈளாடா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளான சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, பிரக்கோலி, லீக்ஸ், பாக்சாய் உள்ளிட்ட காய்கறிகளையும் பயிரிட்டுள்ளனர்.

இந்தநிலையில் மலை காய்கறிகளின் கொள்முதல் விலை நிலையின்றி ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஐஸ்பெர்க் பயிரிட்டுள்ள தோட்டங்களில் பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. மேலும் பயிர்களில் நோய் தாக்குதல் மற்றும் பூச்சிகள் தாக்காமல் தடுக்க விவசாயிகள் கைதெளிப்பான் மூலம் மருந்து தெளித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஐஸ்பெர்க் பயிரிட்டு அறுவடை செய்ய 70 நாட்கள் தேவைப்படும். சில தனியார் நிறுவனங்கள் விதை, நாற்றுகள், இடுபொருட்கள் மற்றும் மருந்துகள் அனைத்தையும் கொடுத்து விவசாயம் செய்ய வைக்கின்றனர்.

கொள்முதல் விலை அதிகரித்தாலும், குறைந் தாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிலை யான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயித்து வழங்கி வருகின்றனர்.இதுமட்டுமின்றி தனியாரிடம் இருந்து விதைகள் வாங்காமல் ஏராளமான விவசாயிகள் சொந்தமாக விதைகளை வாங்கி பயிரிட்டு உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக ஐஸ்பெர்க் கொள்முதல் விலை கிலோ ரூ.80 வரை இருந்தது. தற்போது விலை உயர்ந்து கிலோ ரூ.220-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஐஸ்பெர்க் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது சாலட். சூப் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஐஸ்பெர்க் பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. தற்போது இங்கிலீஷ் காய்கறிகள் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருவதால், அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.