திடீரென சரிந்த கோழிக்கறி விலை... வெறிச்சோடிய கடைகள்..! மவுசு கூடும் ஆட்டுக்கறி..!
கோழி இறைச்சி விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், ஆந்திரப் பண்ணைகளில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னைக்கு வரும் இறைச்சிக் கோழிகள் கணிசமாக குறைந்துள்ளது.
மேலும், பறவைக்காய்ச்சல் பீதி காரணமாக பொதுமக்கள் கோழிக்கறி வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். பெரும்பாலான நுகர்வோர் கோழிக்கறிக்கு மாற்றாக ஆட்டுக்கறிக்கு மாறியுள்ளனர். குறிப்பாக, ஆந்திர எல்லைப் பகுதிகளான ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆரம்பாக்கம், திருவள்ளூர், கே.கே. சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக விற்பனை சரிவடைந்துள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இறைச்சிக் கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு ரூ. 280-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி, தற்போது ரூ. 220 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.