☰
×

நேரில் பார்த்த ஒரே காரணம்..! – 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற 19 வயது பெண்!

 

தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி(15), விடுமுறைக்காக ஊருக்கு வந்தபோது அதே ஊரைச் சேர்ந்த கணவரை பிரிந்த அபர்ணா (19), 14 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்துள்ளார். இதை இருவரின் குடும்பத்தாரிடம் தெரிவிப்பதாக கூறியதால், அந்த ஜோடி அக்.21-ல் ரவியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளது. பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவி நவ.8-ல் உயிரிழந்தார். போலீசார் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜில்லேலா ரவி (15). இவர் சத்துப்பள்ளி நகரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தசரா விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்திருந்தார்.

அதே கிராமத்தை சேர்ந்த அபர்ணா (19) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து கடந்த 6 மாதங்களாக பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

கடந்த அக்டோபர் 20-ந்தேதி அபர்ணாவும், அந்த சிறுவனும் ஒரு அறையில் உல்லாசமாக இருப்பதை ரவி பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரவி, இந்த விவகாரத்தை இருவரது குடும்பத்தினரிடமும் தெரிவிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.

இதனால் தங்களது உறவு வெளியே தெரிந்துவிடும் என பயந்த இருவரும், ரவியை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அதன்படி, கடந்த அக்டோபர் 21-ந்தேதி அந்த 14 வயது சிறுவன், ரவியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு களைக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தை ரவிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனை குடித்த சிறிது நேரத்திலேயே ரவிக்கு தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டதுடன், வாயில் கொப்புளங்களும், உடலில் தோல் பாதிப்புகளும் ஏற்பட்டன.

இதனால் சந்தேகமடைந்த ரவி, இதுகுறித்து இருவரிடமும் கேட்டுள்ளார். அப்போது, குளிர்பானத்தில் விஷம் கலந்திருந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரவி நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவரை கம்மம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக வாரங்காலில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு (எம்.ஜி.எம்.) மாற்றினர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரவி, கடந்த நவம்பர் 8-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து ரவியின் குடும்பத்தினர் அளித்த புகார் மற்றும் மாணவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, அபர்ணா மற்றும் 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதில், 14 வயது சிறுவன் வாரங்காலில் உள்ள சிறார் சீர்திருத்த இல்லத்திற்கும், அபர்ணா சத்துப்பள்ளி துணைச் சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து கல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெ. நாகராஜ் கூறுகையில், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், 15 வயது பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.