மதுபிரியர்களுக்கு அடுத்த ஷாக்..!! மதுபானங்களின் விலை உயர போகிறது..!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார்.
அந்த மசோதாவில், மதுபான நுகர்வினாலும், அதிலிருந்து உருவாகும் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளினாலும் மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் ஏற்படுகின்றன. மதுபானக் கொள்கலன்களை முறையாக அப்புறப்படுத்தாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யாததும் வனவிலங்குகள் மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிப்பதுடன், சூழலியல் சீரழிவிற்கும் முக்கிய காரணமாக அமைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும், ஒழுங்குமுறை நடவடிக்கை அவசியம் என்பதால், மதுபான விற்பனையின் மீது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை விதிக்க அரசு முன்மொழிந்துள்ளது.
இந்தத் தீர்வை வரி மூலம் கிடைக்கும் நிதி வருவாய், குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த மசோதா நேற்று (ஆக.10) அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது எந்தக் கட்சியினரும் விவாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பிறகு, மசோதா சட்டமாக நடைமுறைக்கு வரும். இந்தச் மசோதா சட்டமாக அமலுக்கு வந்தால், மதுபான விற்பனையில் கூடுதல் தீர்வை விதிக்கப்படுவதன் காரணமாக, தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.