×

மக்களுக்கு அடுத்த ஷாக்..!  ஏப்ரல் 1 முதல் முத்திரை கட்டணம் உயர்கிறது..! 

 

 ஏப்ரல் 1 முதல் பத்திரப்பதிவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே மாற்றப்படாமல் இருந்த சில பகுதிகளின் வழிகாட்டி மதிப்பை நடப்பு சந்தை விலைக்கு நிகராக உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மார்ச் 31க்குள் பத்திரப்பதிவு முடிப்பவர்களுக்கு பழைய கட்டணமே பொருந்தும். ஆனால், ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பதிவு செய்பவர்கள், உயர்த்தப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டியிருக்கும்.டோக்கன் முன்பதிவு செய்தவர்கள் இந்த மாத இறுதிக்குள் பத்திரப்பதிவு செய்வது சிறந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா மாறுதல் தொடர்பான ஆன்லைன் நடைமுறைகள் இந்த ஏப்ரல் முதல் மேலும் எளிமையாக்கப்பட உள்ளன. இனி பத்திரப்பதிவு செய்தவுடனேயே தானியங்கி முறையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.இதில் சிக்கல் என்னவென்றால், பழைய வில்லங்கச் சான்றிதழில் (EC) உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யாமல் இருப்பவர்களுக்கு இந்த தானியங்கி முறை கை கொடுக்காது. மேலும் சரியான முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை எனில் பல்வேறு சட்ட சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.

இனி டிடிசிபி அல்லது சிஎம்டிஏ அங்கீகாரம் இல்லாத இடங்களை பதிவு செய்வதில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். சொத்து வாங்குபவர்கள் வெறும் குறைந்த விலைக்கு ஆசைப்படாமல், அந்த இடத்திற்கு முறையான அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஏப்ரல் மாதத்திற்கு முன்பே உறுதி செய்து கொள்வது உங்கள் வாழ்நாள் சேமிப்பை பாதுகாக்கும்.

ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளவர்கள் மற்றும் புதிதாக வீடு கட்டத் திட்டமிடுபவர்கள், இந்த மார்ச் மாத இறுதி கெடுவை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வழக்கறிஞர் மற்றும் ஆலோசர்களை கண்டு இந்த மாத இறுதிக்குள் பத்திர பதிவு செய்வது கணிசமான தொகையை சேமிக்க உதவும்.