மக்களுக்கு அடுத்த ஷாக்..! ஆம்னி பேருந்து கட்டணம் மளமளவென உயர்ந்தது..!
தமிழகச் சட்டமன்ற தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிட்டுள்ள மக்களுக்குத் தனியார் ஆம்னி பேருந்துகள் பெரும் 'கட்டண அதிர்ச்சி'யைக் கொடுத்துள்ளன.சென்னையிலிருந்து நெல்லைக்கு ரூ.3,000, மதுரைக்கு ரூ.3,500, தூத்துக்குடிக்கு ரூ.3,200, திருச்சிக்கு ரூ.2,600 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முக்கிய காலங்களில் இவ்வாறு கட்டணம் உயர்த்தப்படுவதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக நாளை முதல் தமிழக போக்குவரத்து துறை சார்பில் 10 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் அடுத்தபடியாக தனியார் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்வார்கள், இந்நிலையில் பயணிகளின் சூழ்நிலையை பயன்படுத்தி சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தைவிட 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிஉள்ளனர்.
நாளை, நாளை மறுநாள் இரண்டு நாட்களும் சென்னையில் இருந்து நெல்லைக்கு படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனமில்லா பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.2,400 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தூத்துக்குடிக்கு படுக்கைவசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளில் அதிகபட்சமாக ரூ.2,700 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.3,200 வரையும், மதுரைக்கு அதிகபட்சமாக ரூ.2,200 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2,400 முதல் 3,500 வரையும், திருச்சிக்கு அதிகபட்சமாக ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2,000 முதல் 2,600 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பொதுமக்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இதுபோல அதிக கட்டணம் வசூலிப்பதைக் கூட ஒரு வியாபார யுக்தியாக கடந்து செல்ல முடிகிறது. ஆனால் தேர்தல் என்பது ஜனநாயக கடமை அதை நிறைவேற்ற செல்வோரிடம் இவ்வாறு அதிக கட்டணம் வசூலிப்பதை என்ன என்று சொல்வது என ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.