மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி சிலிண்டர் கிடைப்பது கஷ்டம்? - தமிழகத்தில் LPG கேஸ் டேங்கர் லாரி திடீர் ஸ்ட்ரைக்..!
இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலைமை மெல்ல மெல்ல சீராகி வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை உருவாகி இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாடகை ஒப்பந்தம் நிலுவை பாக்கியை இன்னும் செலுத்தாத காரணத்தால், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மீண்டும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
கடந்த இரண்டு மாதங்களாக வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், பல உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பல உணவகங்கள் மூடப்பட்டும், சில உணவகங்களில் உணவு பட்டியல் குறைக்கப்பட்டது. மேலும் சில கடைகளில் பொருள்களின் விலை உயர்ந்தது.
இது தவிர டீ மற்றும் காபியின் விலையும் உயர்ந்தது. தற்போது சிலிண்டர் விநியோகம் சீரடைந்து வரும் நிலையில், விலையேற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விலை, குறைக்கப்படாமலே இருப்பது பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் தற்போது எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 கோடி வரை நிலுவைத் தொகையை பாக்கி வைத்திருப்பதால், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் புதிய ஒப்பந்த விதிமுறைகளில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். காரணமாக இதன் காரணமாக சுமார் 2,000 டேங்கர் லாரிகள், லோடு ஏற்றப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
டேங்கர் லாரி உரிமையாளர்களின் திடீர் வேலை நிறுத்தத்தின் காரணமாக தென்னிந்தியாவில் மீண்டும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.