×

மக்களுக்கு அடுத்த ஷாக்..! ஆவின் நீல நிற பால் விநியோகம் குறைப்பு..! 

 

தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் அரசின் ஆவின் பால் சார்ந்த பொருட்களையே அதிகளவில் வாங்குகிறார்கள். இந்நிலையில், அண்மை காலமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. பால் கொள்முதல் குறைவு காரணமாகவே தினசரி பால் விநியோக அளவு பாதிக்கப்பட்டுவதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் நீல நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் திடீரென குறைக்கப்பட்டுள்ளது.

முன் அறிவிப்பு எதுவும் இன்றி ஆவின் நீல நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்பட்டதால் இன்று (ஜூலை 30) அதிகாலை ஆவின் விற்பனை நிலையங்களுக்குச் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடந்த சில வாரங்களாகவே பால் கொள்முதல் குறைவு காரணமாக, ஆவின் முகவர்களுக்கு வழங்கப்படும் பாலின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, நீல நிற பால் பாக்கெட்டுகள் தற்போது மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனால், தினசரி நேரடியாக பால் வாங்கும் நுகர்வோர் பால் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 32 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது என நெல்லை மாவட்ட ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும், பல்வேறு ஆவின் விற்பனை நிலையங்களுக்கு நீல நிற பால் பாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, நெல்லையில் ஏற்பட்டுள்ள இந்த ஆவின் நீல நிற பால் பாக்கெட் விநியோகக் குறைப்பாட்டை உடனடியாகச் சீரமைத்து, வழக்கம்போல் தடையின்றி பால் விநியோகம் செய்ய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.