அடுத்த கூட்டம் சேலத்தில்... த.வெ.க. தலைவர் விஜய்க்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி..!!
Feb 8, 2026, 15:16 IST
சேலத்தில் வருகிற 13-ந்தேதி விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த வாரம் மனு கொடுத்தனர். மனுவில் மகுடஞ்சாவடி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு இருந்தனர்.
சீலநாயக்கன்பட்டியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது வாகன நிறுத்த போதிய இடம் இல்லை என்றும், கூடுதலாக இடம் தேர்வு செய்யும் படியும் கூறினர். மேலும் தமிழக அரசின் அரசாணைப்படி 10 வகை ஆவணங்களுடன் மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுக்க அறிவுறுத்தினர்.
த.வெ.க. நிர்வாகிகள் திட்டமிட்டப்படி வருகிற 13-ந்தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். நேற்று இரவு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மீண்டும் கடிதம் கொடுத்தார்.
இந்நிலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராசர் மைதானத்தில் பிப்.13-ந்தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 13-ந்தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.