90s கிட்ஸ் கொண்டாடப் போகும் அந்த மாஸ் செய்தி! 26 வருடங்களுக்கு பிறகு புது அவதாரத்தில் களமிறங்கும் கோல்ட் ஸ்பாட்!
90-களின் பிரபல ஆரஞ்சு சுவைக் குளிர்பானமான கோல்ட் ஸ்பாட் (Gold Spot), சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு கோகோ கோலா நிறுவனத்தால் மீண்டும் சந்தைக்குக் கொண்டு வரப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
90-களின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஆரஞ்சு குளிர்பானமான 'கோல்ட் ஸ்பாட்' (Gold Spot), சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியச் சந்தைக்குத் திரும்பவுள்ளது. கோகோ கோலா நிறுவனம் இந்தப் பானத்தை குறைந்த சர்க்கரை (Low-sugar) மற்றும் சர்க்கரை இல்லாத (No-sugar) வகைகளில் மீண்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 'ஃபாண்டா' (Fanta) பானத்திலிருந்து மாறுபட்டு, கோல்ட் ஸ்பாட்டிற்கு எனத் தனி அடையாளத்தை உருவாக்க அந்நிறுவனம் விரும்புவதாகவும், அடுத்த வாரமே இதன் விற்பனை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, 1993-ஆம் ஆண்டு பார்லே (Parle) நிறுவனத்திடமிருந்து கோல்ட் ஸ்பாட் பிராண்டை கோகோ கோலா வாங்கியது. ஆனால், தனது சர்வதேச பிராண்டான ஃபாண்டாவை முன்னிலைப்படுத்துவதற்காக 2000-ஆம் ஆண்டில் கோல்ட் ஸ்பாட் விற்பனையை நிறுத்தியது. தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் இந்தப் பானம் மீண்டும் கடைகளுக்கு வரவுள்ளது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி மற்றும் அவரது மனைவி கோல்ட் ஸ்பாட் பானத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, இது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
ஆரோக்கியமான பானங்களுக்கான தேவை மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதால், குறைந்த சர்க்கரை கொண்ட தயாரிப்பு முறையில் கோல்ட் ஸ்பாட் வெளியாகிறது. கோகோ கோலாவின் குறைந்த மற்றும் சர்க்கரை இல்லாத பானங்களின் விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளதோடு, டயட் மற்றும் லைட் பானங்களின் பங்கு 30 சதவீதத்திலிருந்து 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதேபோல், வருண் பெவரேஜஸ் நிறுவனத்தின் சர்க்கரை இல்லாத மற்றும் குறைந்த சர்க்கரை பானங்களின் விற்பனைப் பங்கும் இரண்டாம் காலாண்டில் 44 சதவீதத்திலிருந்து 88 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆன்லைன் விற்பனை, வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் வசதி மற்றும் பானங்களில் சர்க்கரை அளவைக் குறிப்பிடுமாறு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஆகியவையே இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகும்.
இந்தியாவின் கார்பனேற்றப்பட்ட குளிர்பானச் சந்தை சுமார் ரூ.60,000 கோடி மதிப்புடையதாக உள்ளது. ஒட்டுமொத்த குளிர்பானச் சந்தை 2034-ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பெரும் சந்தையில் ரிலையன்ஸின் காம்பா (Campa), லாகூரி சீரா, பிந்து சீரா மற்றும் ஐடிசி நிறுவனத்தின் கோகோனட் கோலா, சைரோ (Zyro) போன்ற புதிய போட்டியாளர்கள் கோகோ கோலா மற்றும் பெப்சியின் நீண்டகால ஆதிக்கத்திற்கு கடும் சவால் விடுத்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில், பழைய நினைவுகளைத் தூண்டும் பெயர், குறைந்த சர்க்கரை மற்றும் ஃபாண்டாவிலிருந்து தனித்துவமான அடையாளம் ஆகியவற்றுடன் கோல்ட் ஸ்பாட் மீண்டும் களமிறங்குவது ஆரஞ்சு குளிர்பானச் சந்தையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ரசிகர்களையும், ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட புதிய தலைமுறை வாடிக்கையாளர்களையும் கோல்ட் ஸ்பாட் மீண்டும் கவருமா என்பது அடுத்த வாரம் கடைகளுக்கு வந்தவுடன் தெரியவரும்.