×

“திருப்பூரில் காவலரை தாக்க முயன்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர்”- காவல் ஆணையர் விளக்கம்

 

திருப்பூர் அருகே கோயில் திருவிழா ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரை, போதை இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி விரட்டிய சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வருகின்றனர். இதனால் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வந்த போதை ஆசாமி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போதையில் இருந்த வாலிபர் தான் கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து திடீரென பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாரை ஆக்ரோஷமாக தாக்க முயற்சி செய்துள்ளான். இதனை சற்றும் எதிர்பார்க்காமல் இருந்த காவலர் ராமகிருஷ்ணன் தன்னை தற்காத்து கொள்ள தனது இடுப்பில் இருந்த பெல்ட்டை கொண்டு தடுக்கவே அருகே இருந்த மற்ற காவலர்கள் போதை ஆசாமியை மடக்கி பிடித்து கத்தியை பிடிங்கினர். அதனை தொடர்ந்து போதையில் இருந்த வாலிபரை சோதனை செய்ததில் அவரிடம் மிளகாய் தூள் மற்றும் தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் பற்கள் போன்ற பட்டாக்கள் இருந்துள்ளது. தொடர்ந்து காவலரை தாக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், “பொது இடங்களில் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளது. 2025ம் ஆண்டில் கொலைக் குற்றங்கள் குறைந்தது. திருப்பூரில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய நபரை காவலர் தடுக்க முயன்றபோது கத்தி மூலம் தாக்க முயற்சித்டுள்ளார். திருப்பூரில் பொதுமக்கள் முன்னிலையில் காவலரை கத்தியால் தாக்க முயன்ற நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார். அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் 2020ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் ஏற்கெனவே கைதானவர்” என விளக்கம் அளித்துள்ளார்.