"கழகத்தின் குரலாக ஒலித்த காந்தக் குரல் இனி இல்லை!" – தேவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் “தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசையால் பிரதிபலித்தவர் தேவா அவர்கள். Mass, Melody, Devotion என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர்.
தேவா அவர்களின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவருடைய இசை.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது பெரும் மதிப்பும், நம் அ.தி.மு.க. கழகத்தின் மீது பேரன்பும் கொண்ட சகோதரர் தேவா அவர்கள், நம் கழகத்திற்காக மெட்டமைத்த பிரசாரப் பாடல்கள் என்றைக்கும் கழகத் தொண்டர்களின் இதயங்களில் தனித்த இடம் பெற்றவை.
மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் சரி, நான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னும் சரி, தேவா அவர்கள் நமக்காக பாடிய பிரச்சாரப் பாடல்களே கழகத்தின் குரலாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், நம் இயக்கத்தின் அறைகூவல் குரலாக அன்புச் சகோதரர் தேவா அவர்களின் காந்தக் குரல் திகழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
“தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறை மற்றும் இசைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.